கீழ்பென்னாத்தூரில் கருவூலம், துறை சார்ந்த அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும்-கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கீழ்பென்னாத்தூரில் கருவூலம், துறை சார்ந்த அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-07-12 10:37 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் கருவூலம், துறை சார்ந்த அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், துணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார்.

கூட்டத்தில் உதவியாளர் சேகர் தீர்மானங்கள் வாசிக்க அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ராஜேந்திரன், குப்புசாமி ஆகியோர் பேசியதாவது:-பதவிக்கு வந்து 4 வருடங்கள் ஆகியும் 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலரும் தலா ரூ.7 லட்சம் அளவிலான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொகை மக்கள் பணிகள் செய்வதற்கு போதுமானதாக இல்லை. எனவே இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாலுகா அலுவலகம் அமைந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் கருவூலம் உள்பட பல்வேறு துறை அலுவலகங்கள் வரவில்லை. இந்த அலுவலகங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாடழகானந்தல் பெரிய ஏரி நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும், அங்கன்வாடி மையம் பழுதடைந்துள்ளதை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு

நாடழகானந்தல்- செல்லங்குப்பம் வரையிலான ஜல்லி சாலையை தார்சலையாக மாற்றி அமைக்க வேண்டும். தளவாய்குளம் வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சந்தை கூடும் இடத்தில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலம் நெருங்கி வருவதால் கொசு தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு விளக்கம் அளித்தனர்.

முடிவில் பொறியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்