பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எள், முந்திரி பயிர்கள் நாசம்

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எள், முந்திரி பயிர்கள் நாசமானது.

Update: 2023-05-08 18:45 GMT

தா.பழூர்:

கோடை மழையால் சேதம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களிலும், 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி நிலங்களிலும் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள எள் மற்றும் முந்திரி ஆகியவற்றில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் மானாவாரி நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர்கள் ஓரளவு மழைக்கு தாக்குப்பிடித்தாலும், நஞ்சை வயல்களில் குருவை நெல் சாகுபடிக்கு பதிலாக மாற்று பயிராக பயிரிடப்பட்டிருந்த எள் பயிர் முற்றிலும் அழுகி நாசம் அடைந்துள்ளது. இதனால் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் எள் சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை

இதேபோல் பூ பூத்து, காய், பழமாக மாறி இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த முந்திரி பழங்கள் மற்றும் முந்திரி கொட்டைகள் மழை மற்றும் காற்றின் காரணமாக தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. முழுமையாக விளையாத முந்திரி தொடர் மழையால் விழுந்து கிடப்பதால் அது பயனற்றதாக போய்விட்டது. தரையில் விழுந்த முந்திரி கொட்டைகள் மழை ஈரத்தில் ஊறி தரையிலேயே முளைக்கத் தொடங்கி விட்டன. நன்கு விளைந்த முந்திரி கொட்டைகள் மழை ஈரத்தில் விழுந்து முழுவதும் பூஞ்சை பிடித்து கருத்து போய் விட்டன.

இதனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலை எதிர்பார்த்து காத்திருந்த முந்திரி விவசாயிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி சாகுபடியில் விளைச்சல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

மழையால் அழிந்துவிட்டது

கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்:- தமிழக அரசு குருவை நெல் சாகுபடி செய்வதற்கு பதிலாக மாற்றுப் பயிர் செய்ய அறிவுறுத்தியதை ஏற்று, நாங்கள் எள் சாகுபடி செய்தோம். சம்பா சாகுபடிக்குப் பிறகு குருவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எள் சாகுபடி மழையை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் உள்ளோம்.

இழப்பீடு வழங்க வேண்டும்

விவசாயி சின்னதுரை:- சித்திரைப் பட்டத்தில் நஞ்சை வயல்களில் விதைக்கப்படும் எள், எனக்கு நினைவு தெரிந்த வரையில் இதுவரை மழையால் சேதம் அடைந்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு எள் பயிர் மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துவிட்டது. இந்த இழப்பை வேறு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. எனவே அரசு சார்பில் எள் பயிரிட்ட விவசாயிகளை கணக்கிட்டு அவர்களுக்கான இழப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உழைப்பு வீணாகிவிட்டது

கீழக்குடிகாட்டை சேர்ந்த மற்றொரு விவசாயி சின்னதுரை:- எள் பயிர் தற்போதைய மழையால் முற்றிலும் அழிந்து வீணாகி உள்ளது. இதனை எதிர்பார்க்கவே இல்லை. இதனால் எங்களுடைய 3 மாத கால உழைப்பு முற்றிலும் வீணாகிவிட்டது. அரசு தானாகவே முன்வந்து எள் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு

சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன்:- இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் ஏற்படாமல் முந்திரியில் நல்ல விளைச்சல் காணப்பட்டது. இதனால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பூக்களும் கொட்டி அழிந்துவிட்டது. நன்கு விளைந்த முந்திரி உதிர்ந்து கொட்டை கருத்து வீணாகிவிட்டது. முந்திரி கொட்டைகளை உரிய தருணத்தில் பொறுக்க முடியாமல் மண்ணோடு மண்ணாக கிடந்து அவற்றில் முளைப்பு ஏற்படுகிறது. அதிக அளவு பிஞ்சும், காயுமாக இருந்த முந்திரி பழங்கள், விதைகள் விழுந்து அழிந்துவிட்டன. இதனால் ஒவ்வொரு ஏக்கரிலும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே முந்திரி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அரசு வனத்தோட்ட கழகம் மூலம் குத்தகை பெற்றுள்ள விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்க அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பணப்பயிர்களாக விளங்கக்கூடிய எள் மற்றும் முந்திரியில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்