அலைகளுடன் போராடி கடலுக்கு செல்லும் செருதூர் மீனவர்கள்

செருதூரில் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டால் தினந்தோறும் அலைகளுடன் போராடி மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-11 18:45 GMT


செருதூரில் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டால் தினந்தோறும் அலைகளுடன் போராடி மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செருதூர் மீனவ கிராமம்

வேளாங்கண்ணியை அடுத்து உள்ளது செருதூர் மீனவ கிராமம். இக்கிராமத்தில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்" என்ற பாடல் வரிகளை போல இங்குள்ள கிராம மக்கள் கடும் துயரத்தை சந்தித்து கடலில் தொழில் செய்து வருகின்றனர். பொதுவாக மீனவர்களுக்கு நடுக்கடலில் தான் துயரம் என்றால், செருதூர் மீனவர்களுக்கு கரையிலேயே துயரம் காத்திருக்கிறது.

செருதூர் மீனவர்கள் வெள்ளையாறு முகத்துவாரத்தை கடந்து தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும். அப்படிப்பட்ட முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் சூழ்ந்து கிடப்பதால் அதனை கடந்து கடலுக்கு செல்வதும், கடலில் இருந்து கரைக்கு வருவதும் மீனவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் மீனவர்களுக்கு சிக்கல் நிலவி வருகிறது.

மீன்பிடி உபகரணங்கள்

இதனால் படகு ஒன்றுடன் ஒன்று மோதியும், படகின் அடிப்பகுதி மணலில் தரைத்தட்டி விபத்து ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள், படகுகள் உள்ளிட்டவை அடிக்கடி சேதம் அடைகிறது என்று செருதூர் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற செருதூர் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தின் இரு கரைகளிலும் மணல் திட்டுகளை அப்புறப்படுத்தி கருங்கல்லை கொட்டி, தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் திட்டுகள்

இது குறித்து செருதூரை சேர்ந்த மீனவர் முத்துசெல்வம் கூறியதாவது:-

செருதூரிலிருந்து எங்களது படகில் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போதும், திரும்பி வரும்போதும் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளால் கடும் சிரமத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு முறையும் இறங்கி தள்ளி கொண்டு படகை செலுத்த வேண்டி உள்ளது.

எனவே முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி மதிப்பில் மணல் திட்டுகளை அப்புறப்படுத்தினர். மீண்டும் அதே இடத்தில் மணல் திட்டு உருவாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் உள்ளது.

நிரந்தர தீர்வு

தற்போதைக்கு பொக்லின் எந்திரத்தை கொண்டு மணல் திட்டுகளை அடிக்கடி தோண்ட வேண்டி உள்ளது. இதுவும் பயனளிக்கவில்லை. மத்தி சீசன்களில் கடலிலிருந்து படகை மீன்களுடன் கரைக்கு கொண்டு வர கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது முகத்துவார பகுதியில் இரு புறங்களிலும் கருங்கல்லை கொட்டி, தடுப்பு சுவர் அமைத்து பின்னர் வெள்ளை ஆற்றை தூர்வார வேண்டும்.

அப்போதுதான் மணல் திட்டு மீண்டும் உருவாகாது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதுவே செருதூர் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தினந்தோறும் அலைகளோடு போராடிக் கொண்டிருக்கும் எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

இயற்கை பேரிடரில் கடுமையாக பாதிப்பு

மீனவர் கணபதி கூறியதாவது:- சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் எங்களது மீனவர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் எங்களுடைய வாழ்வாதாரத்தை இழப்பது வாடிக்கையாகவே போய்க்கொண்டிருக்கிறது.

அப்படி இருக்க செருதூர் வெள்ளையாற்று முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளால் தினந்தோறும் துயரத்தை சந்தித்து வருகிறோம். இடியாப்ப சிக்கலில் மாட்டி தவிக்கிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே செருதூரில் தூண்டில் வளைவு அமைத்துக்கொடுத்தால் தான் எங்களது வாழ்வாதாரம் மேம்படும். எங்களால் தொடர்ந்து எளிதாக தொழில் செய்ய முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்