செந்தில்பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி

நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

Update: 2024-10-04 23:45 GMT

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜரானார்.அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, 'சென்னை சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை இன்னொரு கோர்ட்டு விசாரிக்க முடியுமா? என சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் பெற இருப்பதால் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் சாட்சியம் அளித்தார்.அவரிடம் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் கவுதமன், பரணிகுமார் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர்.பின்னர், வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்