செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை- 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 8 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2023-06-16 13:27 GMT


சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் ஆகியோரும், செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதாடினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அமலாக்கத்துறை மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்:- அமலாக்கத்துறை விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். போக்குவரத்துக்கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டியது உள்ளது.

பணி நியமனத்துக்காக பெறப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் அறிய வேண்டி உள்ளது. எனவே, செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ:- கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் 14-ந் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். செந்தில்பாலாஜி, அவரது மனைவி வங்கி கணக்கு விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது தொடர்பான அனைத்து விவரங்களையும் அமலாக்கத்துறை சேகரித்து உள்ளது. இதனை தங்களது மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

29.7.2021 அன்று அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்பு, சம்மன் அனுப்பியதை தவிர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திடீரென்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது அமலாக்கத்துறைக்கு நன்றாக தெரியும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக...

சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி, கோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் வாக்குமூலம் அளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். அதன்படி, வரும் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்