தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரால் பரபரப்பு
கோத்தகிரியில் சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதோடு, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரியில் சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதோடு, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை மிரட்டல்
கோத்தகிரி தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் திடீரென தரையில் படுத்துக்கொண்டார். அவரிடம் சிலர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என் சொத்தை ஏமாற்றி விட்டனர். கலெக்டர் வந்தால் தான் எழுந்து செல்வேன் என்று கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், ரமேஷ் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் பிரச்சினை எதுவாக இருப்பினும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பேசிக்கொள்ளலாம், எழுந்து வாருங்கள் என்று கூறினர். அதற்கு அவர் தாத்தாவிற்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை வக்கீலான தனது அண்ணன் ஏமாற்றி எடுத்துக்கொண்டார். அதை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் தலையை நிலத்தில் மோதி காயப்படுத்தியோ அல்லது தாசில்தார் அலுவலக மேல் மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
மனு அளிக்கவில்லை
இதையடுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி தனது தலையை நிலத்தில் மோத தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை தடுத்து, போலீஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஹால்தொரை என்பதும், அவர் மதுபோதையில் நிலத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதும், சொத்து சம்பந்தமாக எந்த அதிகாரிகளுக்கும் எவ்வித மனுவும் அளிக்கவில்லை என்பதும், சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் அவர் போடவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.