தர்மபுரியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு

தர்மபுரி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மறுசுழற்சிக்கு ஆகாத 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகள் மூலம் உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 19:15 GMT

தர்மபுரி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மறுசுழற்சிக்கு ஆகாத 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகள் மூலம் உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தரம் பிரித்து

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாள்தோறும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கப்படுகிறது.

இதில் மக்காத குப்பைகள் அனைத்தும் குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் மயானம், சந்தைப்பேட்டை, பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள மயானம் மதிகோன்பாளையம் அருகில் உள்ள கிடங்கு ஆகிய இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது.

11 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

இவ்வாறு தர்மபுரி நகராட்சியில் இருந்து பெறப்படும் மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அதனை ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் பண்டல்களாக கட்டப்பட்டு உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவுகள் நீக்கும் மையத்திற்கு லாரி மூலம் அனுப்பப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் சேகரமான 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் பண்டல்கள் செய்யப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு உடுமலைப்பேட்டைக்கு அனுப்பப்பட்டது.

இந்தப் பணிகளை நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன் ஆகியோர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்படும் முறை குறித்து விளக்கி கூறினர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பு

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி நகராட்சியை குப்பைகள் இல்லாத நகரமாக உருவாக்கவும், நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் உடுமலைப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டில் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது மஞ்சள் பையை எடுத்து செல்ல வேண்டும். தர்மபுரி நகரை தூய்மையாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வைத்துக் கொள்ள அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்