தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை -மீண்டும் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

மதுரையில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-07-30 23:03 GMT


மதுரையில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தக்காளியின் விலை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

பொதுவாக, மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளியின் விலை 15 கிலோ எடைகொண்ட பெட்டிக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே இருக்கும். ஆனால், தற்போதுள்ள விலையேற்றம் காரணமாக ஒரு பெட்டியின் விலை ரூ.1000-த்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

கிலோ ரூ.200

இதுபோல் நேற்றும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்பனையானது.

இதனால், ஒரு கிலோ தக்காளியின் விலை மொத்த மார்க்கெட்டில் ரூ.150 முதல் ரூ.170 வரை இருந்தது. சிறு கடைகள், வெளி மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை ரூ.200 எனவும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், மதுரை மார்க்கெட்டில் அவ்வப்போது சீசனை பொறுத்து தக்காளியின் விலை குறையும், கூடும்.

ஆனால், இந்த முறை, தொடர்ந்து தக்காளியின் விலை உச்சத்தில் இருக்கிறது. அதிலும், மதுரையில் வரலாறு காணாத வகையில் ஒரு பெட்டியின் விலை ரூ.2 ஆயிரமாக உள்ளது.

எப்படியும் விலை குறைய 2 வாரங்களுக்கு மேல் ஆகும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்