தென்மாவட்டங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மொத்த வியாபாரி பெங்களூரில் கைது

தென்மாவட்டங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மொத்த வியாபாரி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-28 18:45 GMT

தென்மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரது 10 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று மாலை தென்பாகம் போலீஸ் நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்படை

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. அதன்படி முறப்பநாடு போலீசார் புகையிலை பொருட்கள் கடத்திய சிலரை கைது செய்தனர். அவர்களிடம் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பெங்களூர் பின்னிபேட் பகுதியை சேர்ந்த வேல்சாமி கன் சாமுவேல் ஜெயக்குமார் என்ற சாம் (வயது 50) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டு சாமுவேல் ஜெயக்குமாரை தேடினர்.

கைது

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தங்கி இருந்த சாமுவேல் ஜெயக்குமாரை கர்நாடகா போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சாமுவேல் ஜெயக்குமார் மொத்தமாக புகையிலை பொருட்களை பல நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விற்பனைக்கு அனுப்பி உள்ளார். இதற்காக அவர் பெற்ற பணத்தை முறையாக கணக்கில் காண்பிக்கும் வகையில் போலியாக 3 கம்பெனி பெயர்களை உருவாக்கி, அந்த நிறுவன வங்கி கணக்குகளில் வரவு வைத்து உள்ளார். காய்கறி வியாபாரம் மூலம் கிடைத்த பணம் என்று கூறி அதற்கு சுமார் ரூ.1 கோடி வரை ஜி.எஸ்.டி செலுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் சாமுவேல் ஜெயக்குமார் பெயரில் உள்ள 10 வங்கி கணக்கில் இருந்த ரூ.16 லட்சம் பணத்தை முடக்கினர். போலி நிறுவனம் மூலம் ஜி.எஸ்.டி செலுத்தி இருப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கும் போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.

இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை புகையிலை பொருட்களை விற்பனைக்காக அனுப்பி இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதுவரை இவர் எந்த வழக்கிலும் கைது செய்யப்படவில்லை. முதல் முறையாக தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்