வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு

கோவை மாநகராட்சியில் 10 பேர் மனு தாக்கல் செய்தததால் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-07-27 19:15 GMT

கோவை மாநகராட்சியில் 10 பேர் மனு தாக்கல் செய்தததால் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழு

கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு கல்விக்குழு, சுகாதாரக்குழு உள்ளிட்ட குழுக்கள் உள்ளன. இந்த நிலையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழுவுக்கு 9 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் நேற்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

9-க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மு.பிரதாப் அறிவித்தார்.

மறைமுக தேர்தல்

அதன்படி நேற்று காலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் கற்பகம், குமுதம், சுமா, சுமித்ரா, பேபி சுதா, பொன்னுசாமி, ராஜ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சரவணகுமார், கம்யூனிஸ்டு சார்பில் சாந்தியும், ம.தி.மு.க. சார்பில் தர்மராஜ் ஆகிய 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தனர். அதன்படி தி.மு.க.வை சேர்ந்த கற்பகம், குமுதம், சுமா, சுமித்ரா, பேபிசுதா, பொன்னுசாமி, ராஜ்குமார், காங்கிரஸ் சரவணகுமார், கம்யூனிஸ்டு சாந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். ம.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்த தர்மராஜ் தோல்வியடைந்தார்.

சான்றிதழ் வழங்கப்பட்டது

இதையடுத்து வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆணையாளர் மு.பிரதாப் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இதில் மேயர் கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து ம.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சித்ரா வெள்ளியங்கிரி, வேட்புமனு தாக்கல் செய்த ம.தி.மு.க. கவுன்சிலர் தர்மராஜ் கூறுகையில்,

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவில் ஒரு உறுப்பினர் பொறுப்பும.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் என்று முதலில் தெரிவித்ததால் மனு தாக்கல் செய்தோம்.

பாதுகாப்பு

அதன்பிறகு இடம் ஒதுக்க வில்லை என்பது தெரிந்ததும் மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மாநகராட்சி ஆணையாளரிடம் கூறினோம். அவர், மனுவை வாபஸ் பெற முடியாது என்று கூறியதால் மறைமுக தேர்தல் நடந்தது.


நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்றனர். வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதால் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்