கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-10-18 18:52 GMT

தாமரைக்குளம்:

அரியலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளர் அகிலா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரியலூர் சின்னக்கடை வீதி, திருச்சி சாலை, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகள், டிபன் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? விற்பனை செய்யப்படுகிறா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஓட்டல்களில் பாலித்தீன் பைகளை தவிர்த்து, அரசு அனுமதி அளிக்கும் மறு சூழற்ச்சி முறையில் உள்ள பிளாஸ்டிக் டப்பாவை உணவு பொருட்கள் வழங்க பயன்படுத்தலாம் என்றும், பார்சல் பெறுபவர்களுக்கு உணவை வாழை இலையில் மடித்து தர வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகள் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கடைக்காரர்கள் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ கடைக்கு 'சீல்' வைப்பதுடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்