ஆலையில் பதுக்கி வைத்திருந்த 26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

பெரம்பலூர் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 26½ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும், அரிசி ஆலை குத்தகைதாரர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-06 18:39 GMT

ரகசிய தகவல்

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு நடத்தி வரும் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மண்டலகுடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை, பறக்கும் படை தாசில்தார் மாயகிருஷ்ணன், பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை திருச்சி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் உள்ளிட்ட போலீசார் களரம்பட்டியில் உள்ள ஆலைக்கு சோதனையிட சென்றனர்.

26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகன டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 41) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருச்சியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் 70 ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்து அரிசி ஆலைக்கு இறக்கி கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அந்த அரிசி ஆலையில் போலீசார் சோதனை செய்ததில், ஏற்கனவே 330 ரேஷன் அரிசி மூட்டைகளும், 130 உடைத்த குருணை ரேஷன் அரிசி மூட்டைகளும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 400 மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசியும், 130 மூட்டைகளில் மொத்தம் 6½ டன் குருணை ரேஷன் அரிசிகளையும் போலீசார் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக அரிசி ஆலை குத்தகைதாரர் சுரேஷ், சரக்கு வாகன உரிமையாளர் அய்யப்பன், அதன் டிரைவர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். சுரேஷ், அய்யப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், அரிசி ஆலை குத்தகைதாரர் சுரேஷ் அதிக லாபத்திற்காக நாமக்கலில் உள்ள கோழி பண்ணைகளுக்கு அனுப்புவதற்காக ரேஷன் அரிசிகளை கடத்தி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்