ஓமலூரில் சரபங்கா நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 வயது சிறுவன்-தேடும் பணி இரவில் நிறுத்தம்

ஓமலூரில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காண சென்ற 12 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். அவனை தேடும் பணி இரவில் நிறுத்தப்பட்டது.

Update: 2022-09-11 21:35 GMT

ஓமலூர்:

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

ஓமலூர் பேரூராட்சி நேரு நகர் 12-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி கயல்விழி. இவர்களுக்கு மிதுன், வசந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் வசந்த் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சிறுவன் வசந்த் நேருநகர் பின்புறம் சரபங்கா நதி தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றுள்ளான். அவனை தொடர்ந்து அவனது தாயார் கயல்விழி அங்கு வந்தார்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வசந்த் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். தாயார் கயல்விழியும், அண்ணன் மிதுனும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டு கொண்டே ஆற்றை நோக்கி ஓடிவந்துள்ளார்.

ஆனால் வெள்ளம் வசந்தை அடித்து சென்று விட்டது. இது பற்றி ஓமலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் தீயணைப்பு படையினர் சரபங்கா நதிக்கு விரைந்து வந்து மாலை 4 மணி முதல் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நிறுத்தம்

இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை தேடும் பணியை முடுக்கி விட்டனர். இதனிடையே இரவில் ஆற்றில் சிறுவனை தேடும் பணியை நிறுத்தி கொண்ட தீயணைப்பு படையினர் இன்று(திங்கட்கிழமை) காலையில் மீண்டும் சிறுவனை தேடும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.

தாயார் மற்றும் அண்ணன் கண் எதிரே சிறுவன் சரபங்கா நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்