பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்'
பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’
கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் குடோன் உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்
தமிழக அரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆனாலும் கும்பகோணம் பகுதியில் ஒரு சிலர் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
குடோனுக்கு 'சீல்'
இந்தநிலையில் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையம் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் எலுமிச்சங்காபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த ஒரு குடோனில் 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குடோனை நகர் நல அலுவலர் பிரேமா பூட்டி 'சீல்' வைத்தார். மேலும் குடோனின் உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார்.