புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு

பாவூர்சத்திரத்தில் புகையிலை விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-06-21 12:01 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் நடராஜன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது பாவூர்சத்திரம் போலீசார் 7 முறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மீண்டும் இவர் இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்பராக் வகைகளை விற்பனை செய்ததால், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையத்திற்கு புகார் கொடுத்தனர். உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வீணா உத்தரவின் பேரில், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் சசிதீபா அங்கு வந்து சோதனை நடத்தி அந்தக் கடைக்கு 'சீல்' வைத்தார். மேலும் அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான தின்பண்டங்களை கொட்டி அழித்தனர். பாவூர்சத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மகராஜன், பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா உடனிருந்தனர்.

தொடர்ந்து அவர்கள் கீழப்பாவூரில் ஒரு பலசரக்கு கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த காலாவதியான தின்பண்டங்களை அழித்தனர். பின்னர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினர். அத்துடன் அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் சசிதீபா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்