தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; தம்பதி கைது

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-10 20:54 GMT

சமயபுரம்:

அரிவாள் வெட்டு

சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பழனிமுருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பட்டூர் செட்டியார் தெரு வழியாக சென்றதாகவும், இதனால் அதே ஊரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி தேன்மொழிக்கும் இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து தேன்மொழி, சீனிவாசன் ஆகியோர் பழனிமுருகன் வீட்டிற்கு சென்று, எங்கள் வீட்டு பக்கம் நீ வந்ததால் தான் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது என்று கூறி அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பழனிமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், தேன்மொழி ஆகியோரை கைது செய்தனர்.

அமைச்சர் மீது புகார்

*சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திஇந்து முன்னணி நெடுங்கூர் கிளை தலைவர் குணசேகரின் மகன் கார்த்திக் நேற்று சிறுகனூர் போலீசில் புகார் அளித்தார்.

*அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த அப்துல் ஹக்கீம்(43) அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றபோது, அவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பெல் ஊழியரின் மனைவி மாயம்

*திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா ஸ்ரீ(32). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மேகலா டாட்டூ பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று கேட்டு வந்ததாகவும், அதற்கு கருப்பசாமி மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகலாஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்