பைனான்சியருக்கு அரிவாள் வெட்டு

ஆலங்குளம் அருகே, பைனான்சியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-11-01 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே, பைனான்சியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பைனான்சியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரை சேர்ந்தவர் ஐசக் வில்லியம் மகன் பால்ஞானி (வயது 48). இவர் தற்போது சுரண்டையில் வசித்து வருகிறார். ஆலங்குளம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு நல்லூரில் இருந்து குருவன்கோட்டை செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

தீவிர சிகிச்சை

வெகுநேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனது ஜீப்பில் பால்ஞானியை ஏற்றிக் கொண்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது உள்ளார்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நல்லூர் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த சொரிமுத்து மகன் சண்முகவேல் (24) என்பவருக்கு பால்ஞானி வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட சண்முகவேல் அதற்கான வட்டியை சரிவர கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பால்ஞானி சண்முகவேலின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரண்டைக்கு தனது வீட்டிற்கு பால்ஞானி சென்று கொண்டிருக்கும்போது சண்முகவேல் மற்றும் அவருடைய தம்பியான 17 வயது சிறுவனும் சேர்ந்து பால்ஞானியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தப்பியோடிய இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்