தலைமை ஆசிரியை வீட்டின் முன் நின்ற ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஈரோடு அருகே தலைமை ஆசிரியை வீட்டின் முன்பு நின்ற ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-06 15:39 GMT


கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 65). இவருடைய மனைவி ஷீஜா (52). இவர்களுக்கு நிஷாந்த் என்ற மகனும், நிஷாந்தினி என்ற மகளும் உள்ளனர். ஜெயப்பிரகாஷ் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணமார் நகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து தற்போது விடுமுறையில் வந்துள்ளார். ஷீஜா அறச்சலூர் அருகே வெட்டுக்காட்டுவலசில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மகன் பெங்களூரிலும், மகள் சென்னையிலும் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த 28-ந்தேதி குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயபிரகாசின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சமையல் அறையில் இருந்த சிலிண்டரை திறந்து விட்டு, வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை தீவைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் தீப்பிடிக்கவில்லை. இதுகுறித்து ஜெயபிரகாசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் கேரளாவில் இருந்து விரைந்து வந்து, வீட்டில் ஏதேனும் பொருட்கள் திருடுபோய் உள்ளதா என்று பார்த்தார். ஆனால் எந்த பொருளும் திருடப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்