காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாணவ மாணவிகளால் மாபெரும் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில் இயங்கி வரும் அகத்தியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதமானது அறிவியல் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 30-ம் ஆண்டு நிறைவையொட்ட்டி பள்ளியின் முத்து விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவிகளால் மாபெரும் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அகத்தியா பள்ளி தலைவர் அஜய்குமார், பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் சிற்ப கோவில்கள் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சி களம் போன்றவற்றை பள்ளி வளாகத்தில் தத்ரூபமாக மாணவ மாணவிகள் வடிவமைத்து அதற்கான விளக்கத்தையும் அளித்ததை பார்வையாளர் வெகுவாக வியந்து கண்டுகளித்தனர்.
கண்காட்சியில் இயற்கையோடு இணைந்த வாழ்வியலை மேம்படுத்தும் காரணிகளான தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கனம், தண்ணீர் மாசு, மண்ணரிப்பு தடுப்பு, சூரிய குடும்பம் மற்றும் கோள்களின் இயக்கம், தானியங்கி போக்கவரத்து சிக்னல், கணிதப் புதிர்கள், மழலையர்களுக்கான செயல்வழி கணிதம், பெரிடர் மேலாண்மை உள்ளிட்ட ஏராளமான செயல்பாடுகளை பள்ளி மாணவ-மாணவிகள் செயல் விளக்கத்துடன் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் வாலாஜாபாத் பேரூராட்சி துணைத்தலைவர் சுரேஷ்குமார், அரிமா வெங்கடேசன், அரிமா சசிக்குமார், அறிவியல் விஞ்ஞானி இளையராஜா, பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.