மோப்ப நாய்களின் சாகசத்தை கண்டு களித்த பள்ளி மாணவா்கள்
மோப்ப நாய்களின் சாகசத்தை கண்டு களித்த பள்ளி மாணவா்கள்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் துப்பறியும் போலீசாரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தயாபதி நளதன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை. அவர்கள் அதற்கான முயற்சிகள் செய்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக மிக முக்கியம். அதனால் மாணவர்கள் ஒழுக்கத்தோடு தங்களது கல்வி பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட போலீஸ் துறையில் உள்ள துப்பறியும் நாய்கள் கேஷ்பர், ஏஞ்சல், குக்கி ஆகியவற்றின் வீர தீர செயல்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் காண்பிக்கப்பட்டது. இதில் கேஷ்பர் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை துல்லியமாக கண்டுபிடிக்கும் செய்முறை காண்பிக்கப்பட்டது. அதேபோல் ஏஞ்சல் மற்றும் குக்கி நாய்கள் கொலை குற்றவாளிகள் மற்றும் திருடர்களை கண்டுபிடிப்பது எப்படி? என செய்து காண்பித்தது. நாய்களின் துப்பறியும் செயலைப் பார்த்து மாணவர்கள் கைதட்டி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பட் நாயகம், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சேம் வேதமாணிக்கம், உதவி தலைமை ஆசிரியர் வேலவன் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுஜாதா நன்றி கூறினார்.