விருத்தாசலம் அருகே பரபரப்பு மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் பலியானான். இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-09 18:45 GMT

விருத்தாசலம், 

மோட்டார் சைக்கிள் மோதல்

விருத்தாசலம் அருகே பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் பிரேம்குமார் (வயது 12). விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் பொன்னேரியில் உள்ள விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக கோ.ஆதனூரை சேர்ந்த கவியரசன்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரேம்குமார் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யவேண்டும்

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து பிரேம்குமார் உடல் போலீசார் மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றது. இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள் மற்றும் அக்கிராம மக்கள் விபத்துக்கு காரணமான கவியரசனை கைது செய்யக்கோரியும், விபத்தில் இறந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், பொன்னேரி பகுதியில் விபத்துகள் நடைபெறாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்குள்ள விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்