மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு

மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-13 17:40 GMT

ராமநாதபுரம், 

தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க கல்வித்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 1533 பள்ளிகளும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் தூய்மைப் படுத்தப்பட்டு கல்வித்துறை சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ- மாணவிகள் சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பல பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதவிர, எல்.கே.ஜி. உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று சிறுவர், சிறுமிகளை பெற்றோர் பள்ளிகளில் சேர்க்க அழைத்து வந்தனர்.

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில் புதிதாக சேர வந்த சிறுவர், சிறுமிகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து தலைமை ஆசிரியர் எஸ்தர்வேணி தலைமையில் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

புதிதாக சேர்ந்தவர்களுக்கு அரிசியில் அ என எழுதி அவர்களின் கல்வி கற்கும் பயிற்சியை தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான முறையில் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியதால் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தைவிட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வந்ததை காண முடிந்தது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை சேர்க்க அழைத்து வந்திருந்தனர். இவ்வாறு வரும் குழந்தைகளை உற்சாகமாக வரவேற்க விரிவான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்