நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகமும் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-06-12 19:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகமும் வினியோகம் செய்யப்பட்டது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால், 2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை நாளை (புதன்கிழமை), 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 12-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் உமா உத்தரவின்பேரில் அனைத்து பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலையில் அரசின் உத்தரவுபடி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

முதல் நாளில் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். இதேபோல் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளை தலைமை ஆசிரியை சிவகாமி இனிப்பு வழங்கி வரவேற்றார். தொடர்ந்து இறைவணக்கம் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு, பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 513 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

மோகனூர்

இதேபோல் மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவிகளை தலைமை ஆசிரியை சுடரொளி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆசிரியர்கள் ரோஜா மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்