நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
நெல்லை,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
இதில் நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டுவருகின்றன. எனவே நெல்லையில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் சூழல் மற்றும் அதன் நிலை குறித்து ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க தலைமை ஆசிரியருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க கூடாது என்றும் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு வற்புறுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பிரைமரி, மெட்ரிக் என அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும், என்று கூறப்பட்டுள்ளது.