நாகையில், பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு 'சீல்' வைப்பு தாளாளர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது பள்ளி தாளாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-08 19:15 GMT

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அப்போது பள்ளி தாளாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளையாட்டு மைதானம்

நாகையில், தேசிய மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இந்த பள்ளி 100 ஆண்டுகள் பழமையானதாகும். நாகை நாலுகால் மண்டபம், நாகூர் ஆகிய இடங்களில் மேல்நிலைப்பள்ளிகள், நீலா வடக்கு வீதி, பெருமாள் கீழவீதி, நாகூர் ஆகிய இடங்களில் தொடக்கப்பள்ளி என 5 கல்வி நிறுவனங்களுடன் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.

நாகையில், இந்த பள்ளிக்குரிய விளையாட்டு மைதானம் நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 773 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடம் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என கூறி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாத வாடகை நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தனர்.

வாடகை பாக்கி

கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானத்துக்குரிய வாடகை தொகை ரூ.2 கோடியே 86 லட்சத்தை கோவிலுக்கு செலுத்தாமல் பள்ளி நிர்வாகம் பாக்கி வைத்துள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த விளையாட்டு மைதானத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மற்றும் அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத காரணத்தால் விளையாட்டு மைதானத்துக்கு 'சீல்' வைப்பதாக தெரிவித்தனர்.

எதிர்ப்பு-தர்ணா

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேசிய மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளருமான நிஜாமுதீன் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்து மைதானத்தை பூட்டி 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாடகை பாக்கி தொடர்பாக சென்னையில் உள்ள அறநிலையத்துறை கோர்ட்டில் பள்ளி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதற்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்கு 'சீல்' வைப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என கூறி, 'சீல்' வைக்கவிடாமல் பள்ளி தாளாளர் நிஜாமுதீன், தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்தனர். ஆனால் நிஜாமுதீன் மற்றும் ஆசிரியர்கள் இந்து சமய அறநிலையத்துறையை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

'சீல்' வைப்பு

இதை பொருட்படுத்தாமல் செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், கவியரசு, தினேஷ், ராஜராஜன், சண்முகராஜ், கோவில் தாசில்தார் அமுதா உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கதவை தாங்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு பூட்டி 'சீல்' வைத்தனர்.

பின்னர் விளையாட்டு மைதானத்தை சுற்றி சேதம் அடைந்த சுவர் இருந்த பகுதியில் இரும்பு கம்பிகளை போட்டு அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்