பச்சை பயிறு விதைகள் தட்டுப்பாடு

நாகை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில், பச்சை பயறு விதைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-18 18:45 GMT


நாகை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில், பச்சை பயறு விதைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .

முப்போக சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பூச்சு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உளுந்து, பச்சை பயிறு சாகுபடி

நெற்பயிர்கள் அறுவடையாகும் தருணத்தில் உளுந்து, பச்சை பயறு போன்றவை நேரடியாக விதைப்பு செய்யப்படுகிறது.

இந்த பயறு வகை விதைப்புக்கு மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும். நிலத்தின் தன்மை மெழுகுப் பதத்தில் இருக்கும் போது, அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே விதைகளை விதைக்க வேண்டும். அதன்படி நாகை மாவட்ட விவசாயிகள் அறுவடைக்கு முன்னதாகவே உளுந்து, பச்சை பயறு விதைகளை வயல்களில் நேரடி விதைப்பு செய்து வருகின்றனர்.

விதைகள் தட்டுப்பாடு

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு உளுந்து மற்றும் பச்சைப் பயறு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகை, சிக்கல் செம்பியன்மகாதேவி உள்ளிட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில், பச்சை பயிறு விதைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

நேரடி விதைப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா நெல் அறுவடைக்கு முன்னதாகவே உளுந்து, பச்சை பயறு விதைகளை நேரடி விதைப்பு செய்து விடுவோம். அப்போதுதான் சாகுபடிக்கு ஏற்ற ஈரப்பதத்தில் நிலம் இருக்கும். அறுவடைக்கு பின்னர் 20 நாட்களில் விதை முளைக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் ஒருசில வேளாண்மை விரிவாக்க மையங்களில் பச்சைப்பயிறு விதைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை விரிவாக்க மைய அலுவலரிடம் கேட்டால், திருக்கடையூரில் இருந்து விதைகளை கொள்முதல் செய்து வர வேண்டும். விதை விவர சான்று அட்டை ஒட்ட வேண்டும். இதுபோன்ற காரணங்களால் விதைகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் பொழுது விதைகளை தெளித்தால் தான் பயிர் வளரும். காலம் தாழ்த்தி விதைகளை தெளித்தால் எந்த பயனும் இல்லை. இதனால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் விதைகளை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விதை தட்டுப்பாடு உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்