பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது.;

கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது. இறுதி நாளான இன்று இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
அதேபோல், கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
