டெல்லியில் எடப்பாடி பழனிசாமி: அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி செல்கிறார்.;

சென்னை,
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த கூட்டணியில் அ.தி.மு.க. 66, பா.ம.க. 5, பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களே தோல்வியை சந்தித்தனர்.
"இந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது" என்று முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது.
தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க.வோ பா.ம.க., த.மா.கா., ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அணிகளுடன் கூட்டணி வைத்தது.
இந்த தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கிய தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இவை இரண்டும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அப்போதே பேசப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வை இணைக்கும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதற்கான வித்தியாசம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும் தெரிய தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், "இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்றார். தற்போது, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான்" என்கிறார்.
இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தேர்தல் நெருங்கும் சமயத்தில் உறுதியாகி விடும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில், இன்று காலை சட்டசபை கூட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார்.
பொதுவாக, இதுபோன்று அவர் டெல்லி சென்றால் முன்கூட்டியே அவரது பயண விவரம் தெரிய வரும். ஆனால், இன்றைய பயணம் ரகசியம் காக்கப்பட்டது. கடைசி நேரத்திலேயே தெரிய வந்தது.
அவர் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதனால், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரை சந்திக்க இருக்கிறார்? என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு மத்தியில், இன்று காலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "கடந்த மாதம் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று மட்டும் கூறிவிட்டு அவசர அவசரமாக சென்று விட்டார். வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார்.
இதனால், "டெல்லியில் ஏதோ நடக்கிறது?" என்பது மட்டும் தெரிகிறது. அதன் விளைவாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலருமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.