நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு

நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.;

Update:2025-04-03 17:39 IST
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு

நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகே கோடாரங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (வயது 37) என்பவருக்கும் கோடாரங்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் சங்கர்(எ) உலகநாதன் (வயது 30) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனை மனதில் வைத்து கொண்டு 2021 ஜூன் 25-ம் தேதியன்று மாரியப்பன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சங்கர்(எ) உலகநாதன், சுந்தர் மகன் பூதப்பாண்டி (வயது 58), ராசு மகன் வினோத் (வயது 29), முருகன் மகன் ஆனந்த் (வயது 28), சுடலைமுத்து மகன் ராம்குமார் (வயது 32) ஆகியோர் சேர்ந்து மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்திச் சென்றனர்.

இதுகுறித்து வி.கே.புரம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சங்கர்(எ) உலகநாதன், பூதப்பாண்டியன், வினோத்(எ)உலகநாதன், ஆனந்த், ராம்குமார்(எ) பிரசாந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (02.04.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷினி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளிகளான பூதப்பாண்டி, வினோத் ஆகிய 2 பேருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ்குமார் மற்றும் வி.கே.புரம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்