எஸ்.சி.-எஸ்.டி. தொழில் முனைவோரை உருவாக்க அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம்; கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் எஸ்.சி.- எஸ்.டி தொழில் முனைவோரை உருவாக்க அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT

தூத்துக்குடியில் எஸ்.சி.- எஸ்.டி தொழில் முனைவோரை உருவாக்க அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் அதிகளவில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், ஏற்கனவே தொழில் செய்யும் இதே பிரிவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கார் வணிக சாம்பியன்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நேரடி வேளாண்மையை தவிர்த்து உப்பு தயாரித்தல், தீப்பெட்டி தயாரித்தல், உலர் பூக்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், தென்னை நார் பொருட்கள் தயாரித்தல், ஹாலோ பிளாக், பல்பொருள் அங்காடி, வணிகப்பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை, ஐ.டி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர், ஆட்டோமொபைல் சர்வீஸ், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம், கழிவு மேலாண்மை, மருத்துவமனை, கல்யாணமண்டபம், லாட்ஜிங், ரெஸ்டாரண்ட், பெட்ரோல் பல்க், கேஸ் ஸ்டேசன், பயணியர் மற்றும் சரக்குவாகனம், ஆம்புலன்சு, அமரர் ஊர்தி உள்ளிட்ட உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த அனைத்து தொழில் திட்டங்களுக்கும் தனியுரிமை, பங்குதாரர் கூட்டமைப்புகள் சார்ந்த புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கத்திற்கு கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.

தகுதிகள்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய தொழில் முனைவோருக்கு குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். கல்வித் தகுதி தேவையில்லை. திட்டதொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதால் பயனாளர்கள் தமது பங்காக நிதி செலுத்த தேவையில்லை. மேலும் வங்கிக் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை) 6 சதவீதம் வட்டிமானியம் வழங்கப்படும்.

சுயமுதலீட்டில் தொழில் தொடங்கினாலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை முன்முனை மானியமாக பெறலாம்.

விழிப்புணர்வு கூட்டம்

இந்த திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெறவும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன் பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், பைபாஸ்ரோடு, தூத்துக்குடி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் எனது தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ள எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்