நாகையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற எஸ்.ஐ-க்கு அபராதம் விதித்த எஸ்.பி.
காவல் உதவி ஆய்வாளர் கனகராஜுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்குப்பதிவு செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீது மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து காவல் துறை ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறது. நாகை எஸ்பி ஹர்சிங், பப்ளிக் ஆபிஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தி கண்டித்த எஸ்.பி. ஹர்சிங், காவல் உதவி ஆய்வாளர் கனகராஜுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்குப்பதிவு செய்தனர். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த நாகை எஸ்பி ஹர்சிங்கிற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.