முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி10 பவுன் நகைகளை திருடிய பெண்

எரியோடு அருகே முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 10 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-14 19:00 GMT

முதியோர் உதவித்தொகை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 70). விவசாயி. அவருடைய மனைவி பொன்னுத்தாயி (62).

இந்த தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். வெள்ளைச்சாமியும், பொன்னுத்தாயும் பண்ணைப்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெள்ளைச்சாமி வீட்டுக்கு சுமார் 30 வயது பெண் ஒருவர் வந்தார். அவர், கணவன்-மனைவி இருவரிடமும் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவாக கூறினார். இதற்காக அவர்களை அந்த பெண் தனது செல்போனில் படம் பிடித்தார். மேலும் ஒரு தாளில் அவர்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை எழுதி கொண்டார்.

10 பவுன் நகை திருட்டு

அதன்பிறகு வெள்ளைச்சாமியிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தரும்படி அந்த பெண் கூறினார். அதனை பீரோவில் வைத்து இருப்பதாக வெள்ளைச்சாமி தெரிவித்தார்.

உடனே அந்த பெண் நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள், பீரோ சாவியை என்னிடம் கொடுங்கள், நானே எடுத்து கொள்கிறேன் என்றார். அந்த பெண்ணின் கனிவான பேச்சில் மயங்கிய கணவன்-மனைவி அவரை நம்பி பீரோ சாவியை கொடுத்தனர்.

பீரோவை திறந்த அந்த பெண், அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி விட்டு, சாவியை அவரே வைத்து கொண்டார். 5 நாட்களுக்குள் முதியோர் உதவித்தொகை ரூ.1,500 வந்துவிடும் என்று கூறிவிட்டு அந்த பெண் நைசாக அங்கிருந்து நழுவி சென்று விட்டார்.

வலைவீச்சு

இந்தநிலையில் பீரோ சாவியை வெள்ளைச்சாமி தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அப்போது தான், சாவியை அந்த பெண் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர், பீரோவின் பூட்டை உடைத்து பார்த்தார். அப்போது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எரியோடு போலீசில் வெள்ளைச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 10 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்