'மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும்' - செல்வப்பெருந்தகை

மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-19 19:24 IST

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும், இதில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இந்நிலையில் மோடியின் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில் மோடியின் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதில் தவறில்லை என்றும், ஆனால் மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-

"சத்யராஜ் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை அவர் உண்மையான ஹீரோதான். பெரியார் திரைப்படத்தில் நடித்து தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்.

பிரதமர் மோடியின் கதையில் சத்யராஜ் நடிக்கலாம். அது அவருடைய தொழில், அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும். மோடிக்கு இருக்கும் உண்மையான பாசிச முகத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

மக்களுக்கு எதிராக பேசும் மோடி, ராமரை கையில் வைத்துக்கொண்டு அரசியல் பேசும் மோடி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருப்பதை எல்லாம் மறைத்து பரிவினைவாதத்தை பேசுகின்ற மோடி என மோடியின் பல்வேறு குணாதிசயங்கள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசத்திற்கு மோடி செய்த துரோகங்கள் என அனைத்தையும் அந்த படத்தில் சத்யராஜ் பேச வேண்டும்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்