சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம்: தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தனி கடைகள் அமைக்க வேண்டும் கவுன்சிலர் கோரிக்கை

தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தனி கடைகள் அமைக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Update: 2023-09-30 08:58 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தனி கடைகள் அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

தனி கடைகள்

சத்தியமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் செல்வம், துணைத்தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

வேலுச்சாமி (தி.மு.க.):- புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட் எப்போது திறக்கப்படும்? தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளும் காய்கறிகளை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும். அங்கு கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும்.

தலைவர்ஆர்.ஜானகி ராமசாமி:- பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் திறக்கப்படும். விவசாயிகளுக்கு தனியாக கடைகள் அமைத்து கொடுக்கப்படும். கழிவுநீர் தேங்காமல் செல்ல வடிகால் அமைக்கப்படும்.

அதிக பணம் வசூல்

லட்சுமி (தி.மு.க.):- பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுகிறது.

தலைவர்:- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும்.

அரவிந்த் சாகர் (பா.ஜனதா):- எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கோர்ட்டுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

பொறியாளர் கதிர்வேலு:- கோர்ட்டு முன்பு கழிவுநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தர்ணா

திருநாவுக்கரசு (பா.ம.க.):- (திடீரென தலைவர் மேஜைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு பேசினார்) எனது வார்டில் குடிநீர் வசதி கேட்டிருந்தேன். அதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 6 மாதங்களாகியும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

தலைவர்:- விரைவில் குடிநீர் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்படும்.

சீனிவாசன் (தி.மு.க.):- திருமலை நகரில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

தலைவர்:- நேரில் பார்வையிட்டு ஆவன செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார அதிகாரி சக்திவேல் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்