சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2023-09-08 20:42 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜாமீன் மனு

இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ரகு கணேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே 4 முறை அவரது ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன்மனு

சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

மேலும் சி.பி.ஐ தரப்பு மற்றும் ஸ்ரீதர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்