நாற்று பறிக்கும் பணிகள் மும்முரம்

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் நாற்று பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-10-12 19:05 GMT

நாற்று பறிக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், குளமங்கலம், ஆலங்காடு, கீழாத்தூர், மேலாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக, நெல் நடவு பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இப்பகுதிகளில் நெல் வயல்களில் நடவு பணிகளுக்காக, விவசாயிகள் வயல்களில் வாய்க்கால் வரப்புகளை சீரமைத்து டிராக்டர்கள் மூலமாக, உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெல் நடவு பணிகளுக்காக நாற்றங்கால் மூலமாக நெல் விதைப்பு செய்து ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நாற்றுகளை விவசாய கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி அவற்றை பறித்து வருகின்றனர். மேலும் அதன் மூலம் நாற்று நடவு பணிகளையும் விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கை

இப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் கூட ஒரு சில இடங்களில் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தாங்கள் அரும்பாடுபட்டு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வரை இதற்கென இருக்கும் தரகர்களிடம் கமிஷனாக கொடுத்து தான் நெல் மணிகளை விற்பனை செய்ய வேண்டி இருப்பதாகவும் விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வாரக்கணக்கில் காவல் காத்து விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களிலாவது உடனுக்குடன் நெல் கொள்முதல் எந்த வித கமிஷனும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்