25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-15 18:45 GMT

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பசுமை தமிழகம்

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் (கே.எம்.சி) கிளை இணைந்து பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன் பின்னர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி பசுமையான தமிழகத்தை உருவாக்கும் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அதிகளவில் மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்திய மருத்துவக்கழகம் காரைக்குடி கிளை சார்பில் பல்வேறு நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள்

இதேபோல் கடந்த 9-ந்தேதி சிவகங்கை பசுமை திருவிழா தொடங்கப்பட்டு காரைக்குடி பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் 10 நிமிடத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகம் உள்ளிட்ட 37 இடங்களில் ஒரே நேரத்தில் 10 நிமிடங்களுக்குள் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பசுமையான மாவட்டம்

எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட இந்த பசுமை இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடப்பட்டு வரும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பசுமையான மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாங்குடி, எம்.எல்.ஏ., இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ரசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், கேசவன், ஹேமலதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்