சங்கரநாராயண சுவாமி ஆடித்தபசு காட்சி; பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடந்த ஆடித்தபசு காட்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில்:
தென்தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மேலும் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேரோட்டம் கடந்த 29-ந்தேதி காலை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜையும், காலை 9 மணிக்கு கும்ப அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 5.50 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு, தெற்கு ரதவீதியில் உள்ள தபசு பந்தலுக்கு மாலை 6.40 மணிக்கு வந்தடைந்தார்.
இதைத்தொடர்ந்து தபசு மண்டபத்தில் இருந்த அம்பாள் இரவு 7 மணிக்கு தபசு பந்தலுக்கு வந்தார். இதையடுத்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.28 மணிக்கு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார். கோலாகலமாக நடந்த இதை கண்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் வீசினர். பக்தர்கள் 'சங்கரா, நாராயணா' என பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கினர். திருவிழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நள்ளிரவு 12.05 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.திருவிழாவையெட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.