வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

தஞ்சை அருகே வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2023-07-16 20:52 GMT

தஞ்சை அருகே வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

வடிகால்

தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சியில் கே.வி.நாயுடுநகர், லெட்சுமி நகர், விக்னேஸ்வரா நகர் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமலும், வாய்க்கால்களில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கும் சென்று வந்தன. இ்ந்த வடிகால் மூலம் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

கழிவுநீர்

இந்தநிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் வடிகால் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்மூலம் வடிகால் வழியாக நீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது.

அவ்வாறு தேங்கிய நீர் தற்போது கழிவுநீராக மாறி சாக்கடை போல காட்சி அளிக்கிறது. மேலும், செடி, கொடிகள் வளர்ந்து வடிகால் குப்பைமேடுபோல காட்சி அளிக்கிறது.

சுகாதார சீர்கேடு

தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகாலில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி வடிகாலை தூர்வார வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்