சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி ஏற்பு

சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி ஏற்றுக்கொண்டார். மக்கள் சேவைக்கு முன்னுரிமை வழங்குவேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

Update: 2023-06-30 22:13 GMT

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த சங்கர் ஜிவால் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். போலீஸ் பயிற்சி அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் சென்னையின் 109-வது போலீஸ் கமிஷனராக அறிவிக்கப்பட்டார். அவர் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1 மணியளவில் வந்தார். சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவரிடம் பொறுப்புகளை சங்கர் ஜிவால் ஒப்படைத்து, வாழ்த்துக் கூறி புறப்பட்டுச் சென்றார். அதன்பின் சந்தீப் ராய் ரத்தோர் முறைப்படி சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

பேட்டி

பின்னர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முன்பு இப்பணியில் இருந்த போலீஸ் கமிஷனர்களின் நல்ல பணிகள் தொடர பாடுபடுவேன். மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் முன்னுரிமையாக இருக்கும். இப்பணிக்கு சென்னை மக்கள் தங்களின் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, லோகநாதன், கபில்குமார் சி.சரத்கர், இணை மற்றும் துணை கமிஷனர்கள் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளும், கமிஷனர் அலுவலக போலீஸ் பணியாளர்களும் வாழ்த்து கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்