எக்காரணத்தை கொண்டும் மணல் குவாரிகளை அமைக்கக்கூடாது

எக்காரணத்தை கொண்டும் மணல் குவாரிகளை அமைக்கக்கூடாது என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-20 18:45 GMT

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:- சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான குறுகியகால விதைகளை போதுமான அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் பகுதியில் தடுப்பணை சேதமடைய தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைத்ததுதான் காரணம். எனவே எந்த காரணத்தைக்கொண்டும் ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி அமைக்கக்கூடாது.விழுப்புரம் மாவட்டத்தில் கடையம், வளவனூர், வி.சாத்தனூர் பகுதிகளிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் இல்லை. எனவே அங்கு உடனடியாக கால்நடை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். இணையவழியில் பதிவு செய்தால்தான் உளுந்து, துவரை போன்ற விதைகள் வழங்க முடியும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர். கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுகுறித்த விவரம் தெரியவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கையை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை அதற்கான தொகை வரவில்லை. காப்பீடு குறித்த விவரங்களை பெறுவதற்காக தொடர்பு கொள்ளக்கூட தகவல் மையம் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதனை கேட்டறிந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்