இந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை - ஐகோர்ட்டு கருத்து

சனாதனம் என்பது ஒரு நித்திய கடமையாக இந்து தர்மத்துடன் வாழ்பவர்களால் பார்க்கப்படுவதால், மதத்தை பற்றி பேசும்போது, யார் மனமும் புண்படாமல் பேச வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-17 06:32 GMT

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துகளால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலையில், தி.மு.க., முன்னாள் தலைவர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கல்லூரியில், 'சனாதன எதிர்ப்பு' கருத்துகளை மாணவிகள் பகிரலாம் என்று கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கை திருவாரூர் எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி உள்ளதால் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் இளங்கோவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.சேஷசாயி விசாரித்தார். அப்போது, சனாதன எதிர்ப்பு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்று விட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சத்தமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், சனாதனம் என்பது ஒரு நித்திய கடமையாக, இந்துக்களாலும், இந்து தர்மத்துடன் வாழ்பவர்களாலும் பார்க்கப்படுகிறது. இதை அவர்கள் ஏற்றும் கொள்கின்றனர். சனாதன தர்மத்தில் தேசத்தின் கடமை. மன்னனின் கடமை. மக்களுக்கு மன்னன் செய்ய வேண்டிய கடமை. பெற்றோருக்கும், குருவுக்கும் செய்ய வேண்டிய கடமை. ஏழைகள் மீது அக்கறை கொள்வது என்பது உள்பட பல கடமைகள் கூறப்பட்டுள்ளன.

கல்லூரி சுற்றறிக்கையின்படி சனாதன தர்மத்துக்கு எதிராக விவாதிக்கப்பட்டு இருந்தால், இதில் கூறப்பட்டுள்ள கடமைகள் எல்லாவற்றையும் அழித்து விடலாமா? இந்த தேசத்தை குடிமக்கள் விரும்பக்கூடாதா? தேசத்துக்காக அவர்கள் பணியாற்றக்கூடாதா? பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கக்கூடாதா?

சில நேரங்களில் தீண்டாமை மற்றும் சாதி பாகுபாட்டை சனாதனம் ஊக்குவிக்கிறது என்று கூறுகின்றனர். தீண்டாமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.கார்த்திகேயன், 'சனாதனம் ஒருபோதும் தீண்டாமை கொடுமையை ஊக்குவிக்கவில்லை. அனைவரையும் சமமாக கருத வேண்டும் என்றுதான் இந்து மதம் கூறுகிறது. அதே நேரம் சில மோசமான பழக்க வழக்கங்கள் இருக்கலாம். அதை களையாக கருதி அவற்றை அகற்ற வேண்டுமே தவிர, இந்த களைக்காக, பயிர்களை அழிக்க வேண்டுமா?' என்று கூறினார்.

அரசியல் அமைப்பு சட்டம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்குகிறது. அதே நேரம், என்ன பேசுவது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் அரசியலைப்பு சட்டத்தை இயற்றியவர்கள், பேச்சுரிமை முழு சுதந்திரமாக வழங்கவில்லை.

ஒருவர் எந்த மதத்தை தழுவுவது என்பது அரசியல் அமைப்பு சட்டம் உரிமையாக வழங்கி உள்ளது. ஒவ்வொரு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. இயல்பாகவே பகுத்தறிவும் நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது.

எனவே, ஒரு மதத்துக்கு எதிராக பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பேசும்போது, தன்னுடைய பேச்சினால் யார் மனதும் புண்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரமான பேச்சு என்பது வெறுப்புணர்வுகளை வெளிப்படுத்தும் பேச்சாக இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் ஒரு தீர்ப்பில் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, பேச்சு சுதந்திரத்தின்போது, இதையெல்லாம் நிராகரித்து விடக்கூடாது. இதை புறம் தள்ளினால், எப்படிப்பட்ட விவாதமாக இருந்தாலும், அது தடம் புரண்டு விடும். அதன் நோக்கமும் சிதைந்து விடும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, சுற்றறிக்கை வாபஸ் பெற்று விட்டதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதேநேரம், தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும், தீண்டாமையை சமுதாயத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு கல்லூரி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்