அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா என கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-14 19:34 GMT

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது. 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள். அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டு பாதையை உருவாக்கி தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களை தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்

அதன்படி பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார். குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப்பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும். இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப்பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

விருதுநகர் கல்வியாளர் டாக்டர் வைரமுத்துவேல்:-

நாட்டில் ஒரே நாடு, ஒரே கல்வி என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பது பற்றியும் பேசப்படுகிறது. இது ஓரளவு வரவேற்க கூடியது தான். ஆனாலும் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் பற்றி பேசும் நாம் பள்ளியளவிலில் ஒரே பாடத்திட்டம் என்பதை கொண்டு வர வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில் மாநில பாடத்திட்டம் சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி. என்ற பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் இதை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகும். எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிப் பாடங்கள், கல்லூரி வகுப்புகளுக்கு வந்து விடக்கூடாது. ஒரே பாடத்திட்டமுறையை அமல்படுத்த பல்துறை வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வரவேற்பு

கல்லூரி மாணவி ஷிவானி:-

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதற்கென்று பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வி நிபுணர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே வெவ்வேறு நிலைகளில் பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கை வரவேற்கக்கூடியது தான். இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாணவ- மாணவிகளும் கல்வியில் சம வாய்ப்பை பெறுவதன் மூலம் அதில் தங்கள் திறனை மேம்படுத்தி அகில இந்திய அளவிலான வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் சம வாய்ப்பு ஏற்படும்.

இதேபோன்று தேர்வு முறைகளையும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே சீராக கொண்டு வர வேண்டியது அவசியம்.

வேலைவாய்ப்பு

அல்லாளப்பேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவராமகிருஷ்ணன்:-

பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது தான். இருப்பினும் அதற்கென்று பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வி நிபுணர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும். ஒரே பாடத்திட்டத்தோடு மாணவர்களின் அறிவு ஆற்றலையும், பொது அறிவுகளையும் வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் துணை பாடத்திட்டதை உருவாக்கி கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை அனிதா கூறியதாவது: இந்த திட்டம் வரவேற்க கூடிய ஒன்று தான். இதனால் மாணவர்களின் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் பல்வேறு துறை அனுபவங்களை பெறவும், எதிர்காலம் சிறப்பாக அமையவும் வழி வகுக்கும். மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகத்தரம்

கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) டாக்டர் வாசுதேவன்:-

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தால் கல்வி அறிவு உயர்வதோடு மட்டுமின்றி மாணவர்களின் சொந்த திறனை கண்டறிந்து அதனை வளர்ச்சி அடைய முன்னோட்டமாக இருக்கும். மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறுவதோடு மட்டுமின்றி, உலக அளவில் மாணவர்களுடன் போட்டியிட முடியும். கல்வியின் தரம் உயரும். கல்வி கற்பதற்கு ஏற்ப மாணவர்களின் வாழ்க்கை தரமும் அமையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறுவர்.

சாத்தியமில்லை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்:-

தமிழக உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது 85 படிப்புகளுக்கு மட்டும் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதில், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் ஒரேமாதிரியாக வைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. முக்கிய பாடங்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பாடத்திட்டத்தை தங்களது வசதிக்கேற்ப தயாரிக்கின்றன. விருப்பப்பாடத்திற்கான பாடத்திட்டமும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய புதிய திட்டத்தின்படி, முக்கியபாடங்கள், விருப்பப்பாடங்களுடன் தனித்திறமையை வளர்ப்பதற்கான பாடத்திட்டமும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம்.

காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ்:-

இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல நமது பல்கலைக்கழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகம் என்பதால், ஒரு சில படிப்புகள் நவீன காலத்துக்கு ஏற்ற பாடத்திட்டங்களுடன் நடத்தப்படுகிறது. இதனால், முக்கிய பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றும்போது, ஒரே மாதிரியாக பாடத்திட்டம் தயாரிப்பது என்பது சாத்தியமில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்