சம்பா நெல் சாகுபடி பணிகள் மும்முரம்

வடகாடு பகுதியில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-27 18:23 GMT

வடகாடு:

நாற்று நடவு பணிகள்

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக, ஆண்டு முழுவதும் கூட நெல் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு சில இடங்களில் விவசாயிகள் தங்களது நெல் நடவு வயல்களை டிராக்டரை கொண்டு உழவு செய்து நிலத்தை சமன்படுத்தி அதில் மக்கிய சாணம் மற்றும் இலை, தழைகளை இட்டு மறு உழவு செய்து சம்பா நெல் நடவிற்கு தேவையான பணிகளை முழு மூச்சுடன் செய்து வருகின்றனர்.

மேலும் பருவ மழை துவங்க இருப்பதால் அதற்குள் நடப்பு பருவ சம்பா நெல் சாகுபடி பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைத்தல் மற்றும் நாற்று நடவு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்

வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் இதர செலவினங்களை குறைக்கும் வகையில் ஒரு சில விவசாயிகள் தங்களது வயல்களில் நேரடி நெல் விதைப்பு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சன்ன ரகம் மற்றும் குண்டு ரக நெல் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்களையும் தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்க வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, தூயமல்லி, சீரகசம்பா, காட்டு யானம் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவற்றிற்கு உரிய விலைகளில் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் நெல் நடவு பணிகள் நடப்பதால் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளது நெல் மணிகளை மட்டும் எந்த வித இடைத்தரகும் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்