தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் நேரடி விதைப்பு செய்த 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கடையூர்:
200 ஏக்கர்.....
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளான திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, ஆக்கூர், மடப்புரம், வளையல்சோழகன், அன்னப்பன் பேட்டை, காடுவெட்டி, ரவணயன் கோட்டகம், நடுவலூர், நட்சத்திரமாலை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி மற்றும் நேரடி விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் ஆற்றுநீர் அல்லது மழை நீரை நம்பியே சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சாகுபடி பணிகளுக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கி இன்று ஆறுகளில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருந்தாலும், விவசாயிகள் எதிர் பார்த்த மழையும் பெய்யவில்லை. மாறாக அக்னி நட்சத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு அனலாய் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
கருகிய பயிர்கள்
இந்த நிலையில் நேரடி விதைப்பு செய்த பயிர்கள் முளைத்து வந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளன. வயல்களும் முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையான மன உளைச்சல் அடைந்து காணப்படுகின்றனர். இதுகுறித்து பிள்ளை பெருமாநல்லூர் விவசாயி கல்யாணசுந்தரம் கூறுகையில் - மேற்கண்ட பகுதியில் 200- ஏக்கரில் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்துள்ளோம்.தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. நேரடி விதைப்பு மூலம் விதைத்த பயிர்கள் ஒரு அடி அளவிற்கு வளர்ந்து வந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வராததால், மழைப்பொழிவு இல்லாததாலும் பயிர்கள் தரையோடு தரையாக கருகி உள்ளது. இதுவரை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் வளராமல் கருகி வருவது வே தனை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.