மழைநீரில் வீணாகும் கல் உப்பு

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் மழையில் நனைந்து உப்பு வீணாகி வருகிறது.

Update: 2022-12-11 17:53 GMT

வாலிநோக்கம், 

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் மழையில் நனைந்து உப்பு வீணாகி வருகிறது.

உப்பு உற்பத்தி

சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், பத்தநேந்தல், சம்பை, உப்பூர், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன்.

தற்போது வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திலேயே அதிகமான உப்பள பாத்திகளை கொண்டது வாலிநோக்கம். வாலி நோக்கத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. வாலிநோக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமாகவும் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் அமைந்துள்ளன.

வீணாகும் உப்பு

அரசு உப்பள பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் அங்குள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத் திற்கு அனுப்பப்பட்டு உப்பு பேக்கிங் செய்யப்படுகிறது. வாலி நோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு உப்பு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழையால் அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான கல் உப்பு உப்பு நிறுவன முகப்பு பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. உப்பை பாதுகாப்பாக வைக்கும் வகையில் தார்ப்பாய் கொண்டு மூடாததால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் கல் உப்பு வீணாக கரைந்து வருகிறது.

கோரிக்கை

ஆனால் அதே நேரம் அரசு உப்பு நிறுவனத்தின் அருகே உள்ள தனியார் உப்பள பாத்திகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கல் உப்பு மழை நீரில் நனைந்து வீணாவதை தடுக்கும் வகையில் பெரிய தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. எனவே உப்பை தார்ப்பாய் கொண்டுமூடி பாதுகாக்க மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்