சீர்வரிசை பொருட்கள் விற்பனை மும்முரம்

தல பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை மணமகள் வீட்டார் வினியோகிக்க தொடங்கியதால் சீர்வரிசை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெறுகின்றன. கரும்பு, மஞ்சள் குலை விற்பனைக்கு வந்தன.

Update: 2023-01-11 17:27 GMT

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளை சுத்தம் செய்து, கரும்பு, மஞ்சள் குலையுடன் புதுப்பானையில் பொங்கலிட்டு, காய்கறிகளை படையலிட்டு வழிபாடு நடத்துவது உண்டு. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில் திருமணமாகி முதல் பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மணமகள் வீட்டார் சார்பில் பொங்கல் சீர்வரிசைகளை மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்குவது உண்டு.

அந்த வகையில் தல பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் சீர்களை ஆங்காங்கே கொடுத்து வருகின்றனர். புதுக்கோட்டையில் பொங்கல் கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. உழவர்சந்தை அருகேயும், சாலையில் ஆங்காங்கேயும் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதேபோல மஞ்சள் குலையும் சந்தைகளில் விற்பனைக்கு வந்தன.

பொருட்கள் விற்பனை மும்முரம்

பொங்கல் சீர்வரிசையாக கரும்பு, மஞ்சள் குலை, வெல்லம், பச்சரிசி, பொங்கல் பானை, பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதனையும் பொதுமக்கள் வாங்கி மொத்தமாக சீர்வரிசையை கொடுத்து வருகின்றனர். இதேபோல முழு வாழைத்தாரையும் வாங்கி கொடுக்கின்றனர். பொங்கல் சீர்வரிசைக்கான கொள்முதல் காரணமாக பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் வாழைத்தார் ஏலக்கடைகளுக்கு வாழைத்தார்கள் அதிகம் விற்பனைக்காக வரத்தொடங்கி உள்ளன. வாழைத்தார்களின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்