சேலம் சூரமங்கலம் உழவர்சந்தை பகுதியில்போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்கிடப்பில் போடப்பட்ட பூங்கா திட்டம் புத்துயிர் பெறுமா?
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்ட பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூரமங்கலம்,
பூங்கா
சேலம் சூரமங்கலத்தில் ஜங்ஷன் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சேலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயணம் செய்து வருகிறனர். இந்த ரெயில் நிலையம் அருகே சூரமங்கலம் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை வேளைகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.
இதனால் எப்போது சூரமங்கலம் பகுதி பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படும். சூரமங்கலத்தில் இருந்து 5 ரோடு பகுதி செல்லும் சாலையும், 3 ரோடு சாலையும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.
இதை தடுக்கும் வகையில் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே உள்ள சந்திப்பில் பூங்கா அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் அந்த இடத்தில் இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. கூம்பு வடிவில் திட்டு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூங்கா அமையும் இடத்தை சுற்றி பழுதடைந்த வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இந்த வாகனங்கள் அங்கேயே பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் தான் ஏற்படுகிறது. இதற்கிடையில் அந்த பூங்காவிற்குள் சிலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுதவிர அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகளை காண்போம்.
விபத்து
ஜெயக்குமார் (ஸ்டேட் பேங்க் காலனி):-
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். குறிப்பாக உழவர் சந்தை எதிரே உள்ள பகுதியில் போக்குவரத்து சிக்னல் செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த பகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பூங்காவை உடனடியாக அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைய வாய்ப்புள்ளது.
சையத் அன்வர் உசேன் (சூரமங்கலம்):-
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் சூரமங்கலம் வழியாக தாரமங்கலம், ஜலகண்டாபுரம், இரும்பாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் பிரிவு சாலை அருகே பஸ்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
பிரசாத் (அழகாபுரம்):-
போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமையடையாமல் உள்ளது. மேலும் பிரிவு சாலைகளின் இரு புறங்களில் வாகனங்களை நிறுத்திவிடுவதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.