சிறுவர்கள்-இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை; தம்பதி உள்பட 3 பேர் கைது

சிறுவர்கள்-இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-18 21:15 GMT

போதை மாத்திரைகள்

திருச்சி மாநகரில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போலீசார் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரம் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக குற்றங்களும் அதிகரித்து வருகிறது.

இதனால் திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் காமினி, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது போதை ஊசி, மருந்து விற்பவர்களை கைது செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைத்து வருகிறார்கள். இருப்பினும் போதை மருந்து விற்பனை குறைந்தபாடில்லை.

ரகசிய தகவல்

இந்தநிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, அங்குள்ள பிரியாணி கடைக்கு வந்த ஒருவரிடம் பெண் உள்பட 3 பேர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தங்களிடம் போதை மாத்திரை இருப்பதாகவும், அதை நீரில் கலந்து ஊசியாக போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அங்கிருந்த போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 3 பேரையும் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது அவர்களிடம் 'டாப்சின்டா-100' என்ற 240 மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருச்சி வரகனேரி செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்த யூசுப் என்பவரின் மகன் யாசர் (வயது 22), அவருடைய மனைவி ஆயிஷாபானு (20), திருச்சி வடக்கு துவாக்குடிமலை வ.உ.சி. நகரை சேர்ந்த காளிதாஸ் (44) என்பது தெரியவந்தது.

மேலும் வலி நிவாரணத்துக்கு வழங்கப்படும் மாத்திரையை வேதி உப்புநீரில் (சலைன்) கலந்து அதை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டால் போதையாக இருக்கும் என்று கூறி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்பனை செய்ததும், இவற்றை பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து, ஊசியாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தம்பதி உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்