திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2022-07-12 18:09 GMT

திருப்புவனம்,

திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமைகளில் வார சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையும், புதன்கிழமை மாட்டு சந்தை மட்டும் நடைபெறும். இந்த சந்தையில் திருப்புவனத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். வருகிற 17 -ந் தேதி ஆடி பண்டிகை வருவதால் நகர், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் புதிய மணமக்களுக்கு விருந்துகள் வைத்து பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் திருப்புவனம் வாரச்சந்தையில் ஆடி பண்டிகையை முன்னிட்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் இருந்து இரவே வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து சந்தை வளாகத்தில் கட்டியிருந்தனர். 10 கிலோ கறி கொண்ட ஆடு ரூ. 8,000 எனவும், 10 கிலோ கறி கொண்ட கிடாய் ரூ.10,000 எனவும் விற்பனை செய்யப்பட்டது. ஆடி பண்டிகையை முன்னிட்டு 1000 முதல் 1200 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. நேற்று ஒரே நாள் சுமார் ரூ.50 லட்சம் வரை ஆடு, கிடாய்கள் விற்பனையானது. இதேபோல் கோழி, சேவல்களின் விற்பனை அமோகமாக நடந்தது.


Tags:    

மேலும் செய்திகள்